அறந்தாங்கி அருகேமாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம்.
அறந்தாங்கி, ஏப்.26-
அறந்தாங்கி அருகே மாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டி பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டு மாடு என 4 பிரிவுகளாகவும், நடுக்குதிரை, சிறிய குதிரை எல்கை பந்தயம் நடைபெற்றது.இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த பெரிய மாடு 9 ஜோடிகளும், நடுமாடு 11 ஜோடிகளும், கரிச்சான் மாடு 16 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு 20 ஜோடிகளும் கலந்து கொண்டன. இதேபோல் 8 சிறிய குதிரைகளும், 14 நடுக்குதிரைகளும் கலந்து கொண்டன.
பரிசு
பெரிய மாடு வண்டிக்கு 8 கிலோ மீட்டர் தூரமும், நடுமாடு வண்டிக்கு 7 கிலோமீட்டர் தூரமும், கரிச்சான் மாடு வண்டிகளுக்கு 6 கிலோமீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாடு வண்டிகளுக்கு 4 கிலோமீட்டர் தூரமும், நடுக்குதிரைக்கு 7 மைல் தூரமும், சிறிய குதிரைக்கு 6 மைல் தூரமும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.
இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.