அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞர் மரணம்; உறவினர்கள் சாலை மறியல்.
அறந்தாங்கி செப்டம்பர் 14
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கீரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (24). இவர் தனது வீட்டின் வெளியே உறங்கும் பொழுது விஷப்பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது.
உடனே அருகில் இருந்த உறவினர்கள் அஜித் என்பவரை அதிகாலை 3 மணியளவில் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாக மருத்துவர் வராமல் 5 மணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மூன்று மணிக்கு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இரண்டு மணி நேரம் கழித்து அலட்சியப்போக்காக மருத்துவர் வந்து சிகிச்சை பார்த்ததாக கூறி அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சாலை மறியல் செய்யக்கூடிய உறவினர் கூறும் பொழுது வீட்டிலிருந்து கூட்டி வரும் பொழுது அஜித் சுறுசுறுப்பாக இருந்ததாகவும், பாம்பு கடிக்கு உண்டான சிகிச்சை மருத்துவர் வந்து பார்த்து எடுத்திருந்தால் அஜித் இறந்திருக்க மாட்டார் என்றும், மூன்று மணிக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரம் கழித்து வந்து பார்த்ததால் தான் இந்த இறப்புக்கு காரணம் என்றும், அந்த பணியில் இருந்த மருத்துவரை பணி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிதி வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறி அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவகுமார், அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர், அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் சேகர் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உறவினர் வைத்த கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
மூன்று மணி நேரமாக போராட்டம் நடைபெற்றதால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.