அரசு பள்ளி மாணவர்களுக்கு தபால் வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க முகாம்.
புதுக்கோட்டை, ஜூன்.25-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தபால் வங்கிகளில் சேமிப்பு கணக்கு முகாம் தொடங்கியுள்ளது.
வங்கி சேமிப்பு கணக்கு
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தபால் வங்கி சேமிப்பு கணக்கு தொடக்க முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) சண்முகம் தலைமை தாங்கி பேசுகையில், “அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்காக சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக பெற்றோர்களையும், மாணவர்களையும் அலைக்கழிக்கக்கக்கூடாது. தபால் துறை பணியாளர்கள் பள்ளிக்கே வந்து ஆதாருடன் கூடிய தபால் வங்கி சேமிப்பு கணக்கினை மாணவர்களுக்கு தொடங்கி தருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தகுதியுள்ள எந்த மாணவ, மாணவிகளும் விடுபடாமல் ஆதாருடன் கூடிய தபால் வங்கி சேமிப்பு கணக்கினை மாணவர்களுக்கு தொடங்கி கொடுக்க வேண்டும்” என்றார்.
37 லட்சம் மாணவர்கள்
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் முருகேசன் பேசுகையில், “அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை அரசு வழங்கி வருகிறது. இதற்காக ஆதாருடன் கூடிய தபால் சேமிப்பு கணக்கினை தொடங்க தபால் துறை மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் இணைந்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 37 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட வேண்டும். 10 வயதிற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு தபால் கணக்குகளும், 10 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஐ.பி.பி.பி. கணக்குகளும் தொடங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கணக்குகள் தொடங்கும் போது கண்டிப்பாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்” என்றார்.
சேமிப்பு கணக்கு புத்தகம்
தொடர்ந்து தபால் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களுக்கு அதற்கான புத்தகத்தை அதிகாரிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் இந்திய தபால் கட்டண வங்கியின் மேலாளர் கார்த்திக், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகையன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி, இந்திய அஞ்சல் கட்டண வங்கியின் உதவி மேலாளர் சுவாதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சரிதா வரவேற்று பேசினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.