அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற திருடர்கள் விபத்தில் சிக்கி காயம்.
புதுக்கோட்டை, ஏப்.26-
புதுக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற திருடர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளி ஆசிரியை
புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கலைவாணி (வயது 38). இவர் புதுக்கோட்டை புல்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அபினவ் தேவேந்திரன், மகள் அபிநயபாக்யா ஆகியோர் பெருமாநாடு அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தனியார் பள்ளியில் விருது வழங்கும் விழாவில் மகன், மகளுடன் கலைவாணி கலந்து கொண்டார். பின்னர் தனது தந்தை பழனியப்பனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு ெசன்றார். மோட்டார் சைக்கிளை பழனியப்பன் ஓட்டினார். கலைவாணி பின்னால் அமர்ந்திருந்தார். மேலும் அவரது மகன், மகளும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தனர்.
தாலி சங்கிலி பறிப்பு
இந்த நிலையில் கட்டியாவயல் ஜங்ஷன் நால் ரோடு சந்திப்பு அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென கலைவாணியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பினர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசாருக்கு கலைவாணி உடனடியாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து வாக்கி-டாக்கியில் தகவல் தெரிவிக்கப்பட்டு காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடினர். இதற்கிடையே கீரனூர் அருகே வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் கீழே விழுந்து படுகாயத்துடன் சாலையில் கிடந்தனர்.
2 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே கட்டியாவயல் பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களை போலீசார் தெரிவித்த நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் அடையாளமும் ஒன்றாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள், ஆசிரியையிடம் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றவர்கள் என்பது உறுதியானது. மேலும் அதில் ஒருவரிடம் அந்த தாலி சங்கிலியும் இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா தண்டைக்காரன் குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் (21) என்பதும், மற்றொருவர் தஞ்சாவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த கொடியரசன் (31) என்பதும் தெரிந்தது. விபத்தில் காயமடைந்த 2 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் தாலி சங்கிலியை பறித்த சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.