அமரடக்கி அருகே காசியார் மடத்தில் மரத்தில் கார் மோதி விபத்து; பெண் ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம்.
மீமிசல்,ஜூலை.22-
மீமிசல் அமரடக்கி அருகே காசியார்மடம் எனும் இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் அந்த காரில் பயணித்த ஒரு பெண் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல்-ஆவுடையார்கோவில் சாலையில் அமரடக்கியை அடுத்த காசியார் மடம் என்னும் இடத்தில் புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பாருக் அலி (40), சுல்தான் பீவி (50), மைம்பொன் பீவி(55), ரசூல் பீவி(60) ஆகிய நான்கு நபர்களும் மீமிசல் நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது காசியார்மடம் என்னும் இடத்தில் குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே உள்ள புளியமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது, இதில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த ரசூல் பீவி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். காரை ஓட்டி சென்ற பாருக் அலி உட்பட மற்ற மூன்று பெரும் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் மற்றவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்த ரசூல் பீவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.