என்ஜினீயரிங் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இக்கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுக் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் நேற்று 25.08.24 அறிவிப்பு செய்தது.
ஆனால் தற்பொழுது தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கிண்டியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அடுத்த சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணம், பட்டச் சான்றிதழ் கட்டணம், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், ஆய்வறிக்கைக் கட்டணம் ஆகியவற்றை 50% உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது.