மீமிசல் பாப்புலர் பள்ளியில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை.
புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் இன்று 04.05.24 சனிக்கிழமை காலை 6.30 அளவில் மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் “மழை வேண்டி சிறப்பு தொழுகை” நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றி, வறண்டு காணப்படுகிறது, கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டியும் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார ஜமாத் உலமா சபை சார்பாக இஸ்லாமியர்கள் மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
மௌலவி முஜிபுர் ரஹ்மான் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்வில் பாலக்குடி கிருத்தவ தேவாலயத்தின் பாதிரியார் கலந்து கொண்டார். சிறப்பு தொழுகையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு பாப்புலர் பள்ளி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.